திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.1 கோயில் (சிதம்பரம்) - திருக்குறுந்தொகை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.
1
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
2
அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
3
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.
4
ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே.
5
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.
6
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.
7
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.
8
வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.
9
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.
10
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.2 கோயில் (சிதம்பரம்) - திருக்குறுந்தொகை
பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
1
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
2
கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
3
மாணி பால்கநற் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
4
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
5
நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.
6
மைகொள் கண்டனெண் டோளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
7
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.
8
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.
9
ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com